ஆக்சன் வட்டத்துக்குள் சிக்கிய விஜய்

Monday, May 19, 2008


தமிழ் சினிமாவில் விஜய் வட்டத்துக்குள் சிக்கிய பம்பரமாக சுற்றி வருகிறார். அழகிய தமிழ்மகன் மற்றும் குருவி திரைப்படங்களின் தோல்வியால் விஜய் ரசிகர்கள் துவண்டு போன நிலையில் பாலிவுட் சூப்பர் ஹிட்டான சோல்ஜர் படத்தை தமிழில் எடுக்க முடிவு செய்து களம் இறங்க உள்ளார் விஜய். இரு படங்களின் தடுமாற்றத்திற்கு முக்கிய காரணம் இயக்குனர்கள் தான் என்று விஜய் ரசிகர்கள் குற்றம் சாட்டினாலும் வழக்கமான மசாலா படங்கள் இனி போணியாகாது என்று விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இரு படங்களிலும் விஜய் இயக்குனர்களை நம்பி ஏமாந்தார் என்பது அவரது நண்பர்கள் சொல்லும் சப்பை கட்டு. விஜய்யின் ரசிகர் மன்றங்களை கட்டிக்காக்கும் பொறுப்பில் உள்ள ஒரு நண்பர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் ஒருவரிடம் சொன்ன செய்தி இது.... அழகிய தமிழ் மகன் படத்தை எடுக்கும் போது இயக்குனர் ஜீவா, படத்தில் விஜய் கதாபாத்திரம் எதிர்காலத்தை முன்னதாகவே அறிந்து சொல்லும் சுபாவம் உடைய வகையிலும், குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரையில் அனைவரையும் கவரும் விதமாகவும் தயாரிக்கப்படும் என்று உறுதி அளித்தார். ஆனால் சில நாட்களில் படத்தில் விஜய்க்கு இரட்டை வேடம் என்ற போர்வையில் படத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கினார். இதைப்போல தான் குருவியிலும் தரணி சரியான விதத்தில் ரசணையுடன் படத்தை நகர்த்த வில்லை என்று இயக்குனர்களின் மேல் பழியை போட்டிருக்கிறார் நடிகர் விஜய் நண்பர்.
அடுத்தடுத்து இரு படங்களின் தோல்விக்கு பின் கதைக்களத்தை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இன்னமும் விஜய் தரப்பினருக்கு வரவில்லை. ஆக்சன் படம் என்பது கூட்டு, பொரியல் போன்றது. உணவுடன் சேர்த்து சாப்பிடலாமே தவிர உணவாகவே உட்கொள்ள முடியாது. ரசிகர்களுக்கு விஜய் வைக்கும் விருந்தில் அவ்வப்போது இதை கொடுக்கலாம். ஆனால் இதையே எல்லா படத்திலும் கட்டாயப்படுத்தினால் ரசிகர்கள் அடுத்த முறை திரையரங்கிற்கு வரமாட்டார்கள்.
இதையெல்லாம் உணர்ந்து கொள்ளாமலேயே விஜய் - பிரபுதேவா கூட்டணி சேர்கிறார்கள் சோல்ஜருக்காக. இப்படம் பாலிவுட்டில் சக்கை போடு போட்டது. கடந்த 1998ம் ஆண்டில் வெளியான இப்படத்தில் பாபி தியோல், பிரித்தி ஜிந்தா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தார்கள். இப்படத்தில் பாபி தியோலின் தந்தையான ராணுவ அதிகாரியை துரோகிகளின் துணையுடன் எதிரிகள் கொன்று விடுகிறார்கள். சாதாரண மனிதரான தியோல் புரட்சிக்காரனாக உருவாகி எதிரிகளை துவம்சம் செய்கிறார். இடையில் மசாலா தனமாக பிரீத்தி ஜிந்தவை காதலிக்கிறார். துரோகிகள் கூட்டம் தியோல் மற்றும் ஜிந்தாவையும் கொலை செய்ய திட்டமிடுகிறது. தனி மனிதனாக ஒரு கூட்டத்தையே கொல்லும் பாத்திரத்தில் நடித்தார். இப்படத்தின் சண்டை காட்சிகளில் பிரம்மாண்டம் இருந்தது. மேலும் காட்சி அமைப்புகளில் அதிக முக்கியத்துவத்துவத்துடன் இருப்பதற்காகவும் பாடல் காட்சிகளுக்காகவும் ஆஸ்திரேலியாவில் பல காட்சிகளை படமாக்கி இருந்தனர்.
இப்படம் பார்த்தவர்களுக்கு ஒரு ராணுவ வீரனை போன்ற உணர்வுடன் தியோலை சித்தரித்தார்கள். அவ்வளவு கச்சிதமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருந்தார். தமிழில் இப்படத்தை ரீமேக செய்யும் போது பிரபுதேவா விஜய் ரசிகர்களுக்காக செய்யும் சில மாற்றங்கள் எப்படியெல்லாம் இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தால்
*விஜய் இப்படத்திலும் எதிரிகளை கொல்ல எடுத்துக்கொள்ளும் சபதம் ஒரு பஞ்ச் வசனமாகவே இருக்கலாம்
* தந்தையின் மரணத்தைக்கு பின்பு எதிரிகளிடம் இருந்து தப்ப தலையில் ஒரு சாக்குப்பையை மாட்டிக்கொள்ளலாம் (குருவி, கில்லி ஸ்டைலில்)
* அப்பன் செஞ்ச தப்பில ஆத்த பெத்த வெத்தல என்ற ரேஞ்சில் ஒரு குத்தாட்ட பாட்டும் கண்டிப்பாக இடம் பெறலாம்.
இது போல இன்னும் நிறைய இருக்கு ஆனால் சிலவற்றை விஜய் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் வேண்டாம்.
இப்படி தகிடு தித்தம் போடும் காட்சிகள் ரசிகர்கள் சாய்ஸ் என்ற பெயரில் விஜயின் பிரியமானவர்களின் கட்டாயத்தினால் படத்தில் சேர்க்க்படும். ரசிகர்கள் மட்டுமல்லாது நடிகர்களும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அல்வா என்றாலும் ஒரு முறை கிண்டி சாப்பிட்டால் மட்டுமே ருசிக்கும். நான்கைந்து முறை அதை அடுப்பில் வைத்து கிண்டினால் அல்வா சட்டியோடு ஒட்டிக்கொள்ளும். இந்த அர்த்தம் விஜயை வைத்து படம் எடுக்கப்போகும் இயக்குனர்கள் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.
(குறிப்பு : இக்கட்டுரை உள்ளது உள்ளபடி என்ற ரீதியில் எழுதப்பட்டது. விஜய் ரசிகர்கள் படித்தால் சற்றே பொறுத்தருளுக)

6 comments:

கருப்பன் (A) Sundar said...

//
* அப்பன் செஞ்ச தப்பில ஆத்த பெத்த வெத்தல என்ற ரேஞ்சில் ஒரு குத்தாட்ட பாட்டும் கண்டிப்பாக இடம் பெறலாம்.
//

எங்க விசய்யோட இந்த தத்துவப்பாடலை குத்துப்பாட்டு என கூறிய தமிழ்சினிமாவை வன்மையாக கண்டிக்கிறேன்.

இப்படிக்கு,
கருப்பன் (எ) விசிலடிச்சான் குஞ்சு.

ers said...

மறுமொழிக்கு நன்றி. ஆயினும் இது காட்டமா அல்லது கிண்டலா என்று புரியவில்லை. கடைசியில் உள்ள வரிகளை படித்துப்பாருங்கள் நண்பரே...

FunScribbler said...

நல்ல கருத்துகள். விஜய் நடிப்பில் வித்தியாசம் காட்டினால், அவர் இன்னும் பல வெற்றிகளை அடைவார் என்பது திண்ணம். risk எடுக்க பயப்புடுகிறார் என்பதே உண்மை. ஒரு விஜய் ரசிகையாக, நான் இன்னும் பலவற்றை எதிர்பார்க்கிறேன். நம்பிக்கையோடு...

ers said...

மறுமொழிக்கு நன்றி தங்களை போன்ற ரசிகர்களின் கருத்துக்களையும் விஜய்க்கு நெருக்கமானவர்கள் புரிந்து கொண்டால் சரிதான்.

John said...

விஜயின் சமீபத்திய படங்கள் அனைத்துமே வெளிப்படையாக சொல்லப்போனால் வெறும் குப்பை, அதில் “குருவி” குப்பையின் உச்சகட்டம். சமீபத்திய அவரது படங்கள் அனைத்திலும் இருப்பது சில விசயங்கள் தான், கொஞ்சம் செண்டிமென்ட், சில பாடல்கள், ஓவர் ஹீரோயிசம் (தன்னைப் பற்றிய தம்பட்டம்) ரஜினி பாணியில் அட்வைஸ். இதை தவிர இவரது படங்களில் எதுவும் இருப்பது இல்லை. படங்களின் மூலம் அட்வைஸ் பண்ணும் அளவுக்கு பெரிய ஆளாக ஆகி விட்டாரா அல்லது தன்னை அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறாரா என்பது புரியவில்லை.
அவரது ஆரம்ப கால படங்களை பார்த்து தமிழில் நல்ல நடிகர்களின் வரிசையில் ஒரு இடத்தை பிடிப்பார் என நினைத்தேன். ஆனால் சினிமா உலகின் மாயைக்கு அவரும் பலியாகி விட்டார். படம் பார்க்க வருபவர்கள் அனைவரும் மறை கழன்றவர்கள், நாம் எப்படி நடித்தாலும் பார்ப்பார்கள் என்ற நினைப்பில் இப்படிப்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். மொத்தத்தில் தமிழில் சில அரை வேக்காட்டு நடிகர்களின் வரிசையில் விஜய்யும் வந்து விட்டார்.

கருப்பன் (A) Sundar said...

நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்...

விஜய் பாட்டெல்லாம் அவரது ரசிகர்களுக்கு தத்துவ பாடல்களாக ஒலிப்பதை சுட்டிக்காட்டத்தான் அப்படி சொன்னேன் ;-)

விஜய், ஸ்க்ரீனை பார்த்து "என்னமட்டுமில்ல என் இமேஜை கூட உங்களால ஒன்னும் பண்ணமுடியாது"னு பஞ்ச் அடிச்சப்பவே இது உருப்படாதுனு தெரிஞ்சு போச்சு... இனிமே சொல்லுறதுக்கு என்ன இருக்கு!

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP