கமல்ஹாசனின் பொன்விழாப் படமாக உன்னைப் போல் ஒருவன்.

Friday, May 1, 2009



கலைஞானி கமல்ஹாசனின் பொன்விழாப் படமாக வருகிறது உன்னைப் போல் ஒருவன்.

இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் நடிக்கிறார். கமல் மகள் ஸ்ருதிஹாசன் முதல்முறையாக இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் முறையான அறிமுக விழாவை இன்று நடத்திய கமல், படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள் இயக்குநர் சக்ரி, எழுத்தாளர் ஈரா முருகன் (திரைக்கதை - வசனம்), கவிஞர் மனுஷ்யபுத்திரன் (பாடலாசிரியர்) ஆகியோரை அறிமுகப்படுத்தினார்.

பின்னர் கமல் பேசியதாவது:

இந்தப் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து முதல்முறையாக நடிக்கிறேன். இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர் மோகன்லால். அவருடன் சேர்ந்து ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. இப்போதுதான் கைகூடியுள்ளது.

இந்தப் படத்தின் கதை எ வெட்னஸ்டே என்ற இந்திப்படத்தினுடையதுதான். ஆனால் நல்ல கதையை எங்கிருந்து வேண்டுமானாலும் பெறலாம். அதற்கு மொழி கிடையாது.

நான் திரையுலகுக்கு நடிக்க வந்தது ஆகஸ்ட் 12, 1959-ல். இது என்னுடைய திரை வாழ்க்கையின் 50 வது வருடம். படத்தின் பெரும் பகுதி முடிந்துவிட்டது. வரும் மே மாதத்துக்குள் முழுமையாக முடிந்துவிடும். ஜூலையில் வெளியிடும் திட்டம் உள்ளது. ஆனால் நண்பர்களும், ரசிகர்களும் இந்தப் படத்தை என்னுடைய பொன்விழாப் படமாக வெளியிட விரும்புகிறார்கள். எனவே ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியிடவும் ஒரு எண்ணம் உள்ளது... பார்க்கலாம்.

ஸ்ருதியின் இசையில் எனக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்ட பிறகுதான் அவரை இசையமைப்பாளராக இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்தோம். மகள் என்ற பாசத்தில் அல்ல. மூன்று பாடல்கள். மூன்றுமே சிறப்பாக வந்துள்ளன.

இந்தப் படத்தின் இயக்குநர் சக்ரி, நான் நடித்த சலங்கை ஒலியில், தப்புத்தப்பாக போட்டோ எடுக்கும் ஒரு சிறுவனாக நடித்தார். பின்னர் ஹாலிவுட்டில் போய் சரியாக படமெடுப்பது எப்படி என்று கற்றுக் கொண்டு வந்துவிட்டார் போலும்... என் படத்துக்கே இயக்குநர் ஆகியுள்ளார்.

இந்தப் படம் நிச்சயம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும், தமிழ் ரசிகர்களுக்கு, என்றார் கமல்.

'பெருமை': மோகன்லால்

படத்தில் தனது அனுபவம் குறித்து மோகன்லால் பேசுகையில், கமலின் தீவிர ரசிகரான தனக்கு அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்து உண்மையிலேயே பெரிய பெருமை, மகிழ்ச்சி என்றார்.

தெலுங்கில் இந்தப் படத்துக்கு ஈநாடு எனப் பெயர் சூட்டியுள்ளனர். உன்னைப் போல் ஒருவன் கேரளாவில் நேரடி தமிழ்படமாகவே ரிலீஸாகிறது.

இதுகுறித்துப் பேசிய மோகன்லால், 'மலையாளிகள் நேரடி தமிழ் படங்களையே விரும்பி பார்ப்பார்கள். தமிழ் மொழியின் ஜீவன், உணர்வுகள் அனைத்தையும் அவர்களால் புரிந்து கொள்ள முடியும்!' என்றார் மோகன்லால்.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP