ஐஸ்வர்யா கேரவன் பறிமுதல்: ராவணா ஷூட்டிங் ரத்து

Tuesday, June 9, 2009

தக்க அனுமதி பெறாமல் ஊட்டியில் இயக்கப்பட்டு வந்த ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நடிகர் நடிகைகளின் கேரவன்களை போக்குவரத்துத் துறையினர் கைப்பற்றினர்.

தமிழ் - தெலுங்கு மற்றும் இந்தியில் இயக்குநர் மணிரத்னம் இயக்கும் ராவணா (அசோகவனம்) படத்தின் படப்பிடிப்பு உதகையில் நடந்துவருகிறது.

ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், விக்ரம், கார்த்திக், ப்ரியாமணி என இந்தியாவின் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் ஊட்டியில் துவங்கியுள்ளது.

இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்துள்ள ஐஸ்வர்யா ராய், விக்ரம் போன்றவர்களுக்கு தனித்தனியாக கேரவன்கள் ஊட்டிக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

இந்த கேரவன்களுக்கு உரிய வரி கட்ட படப்பிடிப்புக் குழு தவறிவிட்டதாக வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மோகன்ராமுக்குத் தகவல் வர, அப்பகுதி போக்குவரத்து ஆய்வாளருடன் அவர் ஆலோசனை செய்தார்.

பின்னர் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கே சென்று பார்வையிட்டனர் இருவரும். அப்போதுதான் அங்கிருந்த கேரவன் ஒன்றின் எஞ்சின் எண் திருத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த வாகனத்தை கைப்பற்றி உதகைக்கு கொண்டு வந்தனர்.

இதுகுறித்து சென்னையிலுள்ள போக்குவரத்து துறை உயர் அலுவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் கேரவன் வாகனங்கள் குறித்த சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ஒரு கேரவன் வாகனம் இதேபோல முறைகேடு செய்யப்பட்ட எஞ்சின் எண்ணோடு இயங்கிக் கொண்டிருப்பது கண்டுபிடுக்கப்பட்டது. இவை தவிர மேலும் இரு கேரவன்களும் இதேபோன்ற முறைகேட்டுடன் இயங்கிக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

இந்த 4 கேரவன்களின் மொத்த மதிப்பு ரூ. 2 கோடிக்கும் மேல் என்கிறார்கள். இவை அனைத்துமே ராவணா படப்பிடிப்புக்காக கொண்டு வரப்பட்டவை.

வாகனங்களின் என்ஜின் எண்களை திருத்துதல், வரி ஏய்ப்பு செய்தல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளின்படி இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மணிரத்னத்தின் படம் தொடர்புடைய பிரச்சினை இது என்பதால், சென்னையில் உயர் அதிகாரிகள் மட்டத்தில் தீவிர ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, கேரவன்கள் இல்லாததால் படப்பிடிப்பு நடத்த முடியவில்லையாம். படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இதே பிரச்சினைக்காக கொடைக்கானலில் நடந்த ராவணா படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது நினைவிருக்கலாம்.

1 comments:

Raghu Para said...

Very good. Hope you lik http://raghuism.com (mine) as well? :-)
Cheers
Raghu

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP